மாலைதீவு சபாநாயகர் முகமது நஷீத்தின் சகோதரர் அகமது நஜிம் அப்துல் சத்தார் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் நிர்வாகம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தனது சகோதரரைக் கைது செய்துள்ளதாக முகமது நஷீத் குற்றம் சுமத்தியுள்ளார்.
குற்றவியல் நடைமுறைகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆளும் கூட்டணியில் உள்ள கடும்போக்கு வாதிகளை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதி செய்துள்ளதாக மாலைதீவில் உள்ள சன் செய்தி வெளியிட்டுள்ளது.45 வயது, 35வயது மற்றும் 46 வயதுடைய மாலைதீவு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் நஷீத்தின் சகோதரரை தவிர்ந்த ஏனைய இருவரும் காவல்துறை அதிகாரிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இளம் நபர் ஒருவருடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்படும் காணொளிகள் இருந்துள்ளன. குறித்த வங்காளதேசத்தைச் சேர்ந்த நபர் கடந்த 12ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர், வாடிக்கையாளர்களுடன் உடலுறவு கொண்டதை காணொளியா பதிவு செய்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். பின்னர் அந்த காணொளிகளை பயன்படுத்தி அவர்களை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.