ஆறு,ஏழு கோடி ரூபா பெறுமதியான பணத்தை நான் பெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் பரப்படுகிறது. ஆனால் பணத்துக்கு நானோ எனது குடும்பமோ ஆசைப்பட்டதில்லை. கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகவும் வாக்களிக்கவில்லை என புளொட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய கல்வியில் கல்லூரியின் காணி தற்போதைய மதிப்பு 60 கோடி வரை வரும். அதனை நன்கொடையாக வழங்கிய எனக்கு பணம் பெரிதல்ல. பணத்துக்காக செயற்படுவதில் எனக்கோ எனது குடும்பத்துக்கோ உடன்பாடில்லை.
கடந்த காலத்திலும் கூட்டமைப்பு தலைமைக்கு கோடிக்கான பணம் வழங்கப்பட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இவ்வாறான கதைகள் வர காரணம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மலினப்படுத்துவதே ஆகும். இதனை சக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே செய்வதை ஏற்கமுடியாது.
எந்த சந்தர்ப்பத்திலும் எப்போதும் நான் யாரிடமும் பணம் பெற்றது கிடையாது. இவ்வாறான கதைகளை கூறுவதன் மூலம் எங்களை விட கூடுதலான விருப்பு வாக்கை பெற்றுக் கொள்ள முடியும் என்பது தவறு ,தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்குகள் இல்லாது போகும்.
இன்று மிகப்பலம் பொருந்திய கட்சியாக காணப்படுகின்ற இந்த கட்சியை உடைப்பதன் மூலம் நிச்சயமாக தமிழ் மக்களுடைய அபிலாசைகள் அனைத்தையும் உடைப்பதற்கே காரணமாக அமையும். இது சிங்கள தேசியத்திற்கும் பேரினவாதிகளுக்கும் உதவி செய்வதாகவே நான் பார்க்கிறேன்.
இன்னொரு விடயம் நிச்சயமாக என்னை பொறுத்தவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எப்பொழுதும் எவரிடமோ பணம் பெற்று நான் வேலை செய்வதில்லை. நான் மாறாக ஒரு நன்மை செய்யப்போகிறேன் என்று பணம் வாங்கியதுமில்லை.
நான் என்னை பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை.மக்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் எங்களுடைய கடந்த காலங்களை பார்க்கின்ற பொழுது யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் தெரியும். நாங்கள் எப்படி செயல்பட்டு இருக்கின்றோம் என்று ஆகவே நான் சொல்ல தேவையில்லை. ஆனால் இவ்வாறான வதந்திகள் வருகின்ற பொழுது நான் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.