வடமராட்சியிலுள்ள தனது அலுவலகத்தில் (28) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”நாட்டில் இன்று பொதுமக்கள் மீது மோசமான அடக்குமுறைகள் அரசாங்கத்தினாலே பிரயோகிக்கப்படுகின்றன.
ஆர்ப்பாட்டமொன்று 3,4 மாதங்களாக வன்முறையற்ற ரீதியில் நடைபெற்று மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டங்களை பார்க்கின்றபோது உலகத்திலே இல்லாதளவிற்கு மிகவும் நேர்த்தியாக, வன்முறை பிரயோகிக்காமல் இந்த நாட்டை சூரையாடிய ராஜபக்ச குடும்பத்தினரை முற்றுமுழுதாக அப்புறப்படுத்துவதிலே இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வெற்றியடைந்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை செய்தபோது இவர்களுக்கு உறுதுணையாக நாட்டில் பல பாகங்களிலிருந்தும் மக்கள் திரண்டுவந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விசேடமாக தலைநகரில் நடுத்தரவர்க்கத்தினர் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.
ஆனால் இன்றைக்கு அதே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க முன்வருவதற்கு பலர் தயங்குகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பாக (27) நாடாளுமன்றத்தில் அரசு தரப்பிலே உரையாற்றிய அனைவரும் கூறிய ஒரே விடயம் அங்கிருந்து அமைதியான முறையில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வந்த நிலையில் பிறகு அண்மையிலே வந்தவர்கள் சிலர் அதனை கைப்பற்றிவிட்டார்கள்.
அவர்களை தான் நாம் கைது செய்துள்ளோம் என்றெல்லாம் சொல்கின்றார்கள். உண்மையிலேயெ ஆரம்ப நாட்களிலிருந்து நேர்த்தியாக நடத்தியவர்களை அடையாளங்கண்டு அவர்களை கைது செய்வதில் மும்முரமாக உள்ளனர்
இதில் விசித்திரமான ஒரு விடயம் என்னவென்றால் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வதில் இவ்வளவு கவனம் செலுத்துகின்ற பொலிஸார் நாட்டிலே நடைபெறுகிற பலவிதமான அத்துமீறல்கள், கொலைகள், கொள்ளைகள், அதை விட நாட்டின் சொத்துக்களை சூறையாடியவர்கள் என பலர் இங்கு உள்ளனர்.
இவ்வாறானவர்களை நாட்டு மக்கள் அப்புறப்படுத்தியிருந்தாலும் பொலிஸாராலோ, நிர்வாகத்தினராலோ இப்போதுவரை அவர்களை கைது செய்ய முடியவில்லை.
ஆகவே மிகவும் நேர்த்தியாக, வரவேற்கத்தக்க விதத்திலே ஒரு பாரிய புரட்சியை ஏற்படுத்தி நாட்டு மக்கள் விரும்பிய மாற்றத்தை கொண்டு வந்தவர்களை இன்று பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்களை கைது செய்ய முனைவது மிகவும் மோசமான ஒரு செயற்பாடு.
நாட்டு மக்களுக்கு நாங்கள் ஒரு அழைப்பு விடுக்கிறோம். உங்கள் சார்பாக இந்த போராட்டத்தை நடத்தியவர்கள், நாட்டை சூறையாடியவர்களை அப்புறப்படுத்தியவர்கள் அடக்குமுறைக்கு உட்படுவதை நீங்கள்தான் தடுக்க வேண்டும்.
எங்கள் சார்பாக எங்கள் நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக இந்த கொள்ளை கும்பலை அடித்து விரட்டிய இந்த ஆர்ப்பட்டக்காரர்களை பாதுகாக்கும் பொறுப்பு இப்பொழுது எங்கள் ஒவ்வொருவரது கையிலும் உள்ளது” என தெரிவித்துள்ளார்.