சமூக வலைத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பகிர்ந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மோகன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சட்டத்தரணி ரி.ஜெயசிங்கம், சின்னத்துரை ஜெகன் ஆகியோர் நேற்று ஆஜராகி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்நகர் பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் எஸ். அன்வர் சதாத் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டதுடன் நேற்று மாலை தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதனிடையே, தமிழர் பகுதிகளில் நிலச்சுரண்டல்,வளச்சுரண்டலுக்கு எதிராக குரல்கொடுத்ததற்காக மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் தன்னை பயங்கரமாக பழிவாங்கியுள்ளதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.