கர்ப்பவதி பெண் ஒருவருக்கு எரிபொருள் வழங்க மறுத்தமையை வீடியோ பதிவின் மூலம் அம்பலப்படுத்திய இளைஞனுக்கு எதிராக வலி,கிழக்கு ப.நோ.கூ சங்கத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த 28ம் திகதி மாலை அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கர்ப்பவதி பெண் ஒருவருக்கு எரிபொருள் வழங்காமல் எரிபொருள் நிரப்பு நிலையம் பூட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த இளைஞர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தாரிடம் நியாயம் கேட்டதுடன், அதனை தனது தொலைபேசியில் வீடியோ பதிவும் செய்திருந்தார். அதில் கியூ.ஆர் கோட் இருந்தும் வாகன இலக்கத்தின் இறுதி இலக்க நாளாக இருந்தும் அவருக்கு ஏன் எரிபொருள் நிரப்பு முடியாது என கேட்டிருந்தார்.
இதனையடுத்து எரிபொருள் நிரப்ப நிலையத்தார் குறித்த கர்ப்பவதி பெண்ணுக்கு எரிபொருள் வழங்க இணக்கம் தொிவித்திருந்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் எரிபொருள் வழங்கியிருந்தனர்.
மக்கள் குழுப்பமடைந்த பின்னர் எரிபொருள் வழங்கிய குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தார் அதற்கு முன்னர் உரியவாறு எரிபொருளை மக்களுக்கு விநியோகிக்காமை ஏன் என்பது மக்களின் கேள்வியாக இருந்தது.
இந்த விடயம் தொடர்பான வீடியோ பதிவுகள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த இளைஞனை பல வழிகளாலும் அணுகிய ப.நோ.கூ சங்கத்தினர் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை அகற்றும்படி கேட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞன் மீது அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.