வெளிநாட்டிலிருந்து வருவோர் விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்கும், மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து விமான நிலையம் செல்வதற்கும் தனியார் வாடகை வாகனங்களை பயன்படுத்தும்போது அதற்கான எரிபொருளை இ.போ.ச ஊடாக வழங்கும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்திற்கு பெருமளவான வெளிநாட்டவர்கள் வருகைதரும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் வாடகை வாகனங்களை பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்கு இ.போ.ச ஊடாக எரிபொருளை வழங்கும் நடைமுறை அமுலில் இருந்தது.
ஆனாலும் அதனை சிலர் துஷ்பிரயோகம் செய்தமையினால் அந்த நடைமுறை கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் உண்மையாக தேவைப்படும் மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீளவும் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
எனவே வாகன உரிமையாளர்கள் தங்கள் தங்கள் பிரதேச செயலகங்களில் அதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்று கிராம சேவகரின் அறிவுறுத்தல்களை பெற்று அவர்கள் ஊடாகவே விண்ணப்பம் செய்வதன் மூலம் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும். எனவே தேவையானவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் இந்த சலுகையினை துஷ்பிரயோகம் செய்வதற்கு யாரும் முயற்சிக்கவேண்டாம். அவ்வாறு முயற்சித்தால் மீண்டும் அந்த சலுகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. என மாவட்டச் செயலர் கூறியுள்ளார்.