புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் கூறியுள்ளதுடன், தன் மீது அவருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
பொதுமக்கள் சிலரின் எதிர்ப்பினை தொடர்ந்து பிரதேச செயலாரின் இருப்பிடத்தில் பொலிஸார் நடத்திய தேடுதலின்போது 65 லீற்றர் எரிபொருள் நேற்று முன் தினம் இரவு மீட்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பிரதேச செயலர் கூறுகையில், அலுவலக மின்பிறப்பாக்கி மற்றும் வாகன தேவைக்காக சுமார் 50 லீட்டரை சேமித்து வைத்திருந்தோம். அதேவேளை என்னுடைய சொந்த தேவைக்காக 8 லீட்டர் பெட்ரோலை கடந்த இரு வாரங்களில் பெற்று சேமித்து வைத்திருந்தேன்.
எனது வீடு யாழ்ப்பாணத்தல் உள்ளமையால், வீடு சென்று வர மோட்டார் சைக்கிள் தேவைக்கு என அதனை சேமித்து வைத்திருந்தேன். அத்துடன் கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு நிலவிய வேளையில் சமையலுக்காக வாங்கி வைத்திருந்த சுமார் 3 லீட்டர் மண்ணென்ணெய் என்பவற்றையே பொலிஸார் மீட்டனர்.
அலுவலக தேவைக்காகவும், சொந்த தேவைக்காகவும் வைத்திருந்த எரிபொருளை மீட்டு விட்டு, ஏதோ தாம் பாரிய பதுக்கலை கண்டுபிடித்த மாதிரி செய்திகளை பரப்பியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைகளை மீறி இரண்டு எரிவாயுக்களை பெற முனைந்துள்ளார். அதற்கு எமது உத்தியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து எனது சம்மதத்தை பெற்று வருமாறு கூறி இருந்தனர்.
அதேபோன்று மறுநாள் விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் நடைமுறைகளை மீறி தென்னிலங்கை வாசிக்கு டீசல் பெற்றுக்கொடுக்க முயன்றுள்ளார். அதற்கு எமது கிராம சேவையாளர் இடமளிக்கவில்லை. அதேவேளை பொலிஸார் வேறு நபர்களின் மோட்டார் சைக்கிள்களை பெற்று வந்து எரிபொருள் பெற்று செல்வதனை தடுத்து இருந்தோம்.
அத்துடன் நடைமுறைகளை குழப்பி சட்டவிரோதமாக எரிபொருளை பெற முனைத்தவர்களையும் தடுத்துள்ளோம். இவ்வாறான நிலையிலையே எம் மீது வீண் பழி சுமத்தும் நோக்குடன் நேற்றைய தினம் எமது அலுவலக தேவை மற்றும் எனது தனிப்பட்ட தேவைக்காக சேமித்து வைத்திருந்த எரிபொருளை மீட்டு
அபாண்டமான குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளனர். இது தொடர்பில் எனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உள்ளேன் என்றார்.