
செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு -செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுக்களை உடனடியாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், அவற்றின் தலைவர்களுக்கு அலுவலக வசதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு அரச சேவையில் இருந்து அதி வினைத்திறன் வாய்ந்த சேவை தேவை என்றும் தெரிவித்தார். துறைசார் கண்காணிப்புக் குழுக்களின் தலைவர்களை அமைச்சரவைக்கு அழைக்க தாம் தயார் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 22ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.