
ரயிலில் காணப்பட்ட சிறுமி அச்சத்துடன் காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சிறுமி கடத்தப்பட்டதை கண்டுபிடித்த பொலிஸார் கடத்தல்காரனை கைதுசெய்து சிறுமியை மீட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற சிறுமி, அச்சமுற்று காணப்படுவதாக மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, மஹரகம ரயில் நிலையத்திற்கு சென்ற பொலிஸ் குழுவினர் குறித்த சிறுமியை மீட்டதுடன், சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர். தலவத்து ஓயா பகுதியை சேர்ந்த சிறுமியே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 03 ஆம் திகதி எசல பெரஹர பார்க்கச்சென்றிருந்த சிறுமியை, அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் சந்தேகநபர் கடத்திச்சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமியை காணவில்லை என கண்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பேராதனையை சேர்ந்த 30 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.