சீன விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்ததாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இதனை குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக சீனா அறிவித்தது.
தைவானை தனது பிரிந்து சென்ற மாகாணமாக சீனா பார்க்கும் நிலையில், நான்சி பெலோசியின விஜயம் சீனாவை ஆத்திரமடைய செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் தைவானை அண்மித்த பகுதிகளில் சீனா இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டது.
மேலும் 11 ஏவுகணைகளை ஏவியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்து. எவ்வாறாயினும், முக்கிய தகவல் தொடர்புகளை நிறுத்துவதன் மூலம் சீனா பொறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாட்டினார்.
மேலும் தைவான் மீதான சீன நடவடிக்கைகள் அமைதியான தீர்மானத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் இருந்து சக்தியைப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே, சீன விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்ததாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று தைவான் ஜலசந்தியில் பல சீனக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயணங்களை மேற்கொண்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தைவான் 20 சீன விமானங்களை எச்சரித்து துரத்தியதாகவும், தைவான் ஜலசந்தியைச் சுற்றி 14 சீன இராணுவக் கப்பல்கள் செயல்பட்டு வருவதையும் கண்டறிந்துள்ளதாகவும் தைவான் குறிப்பிட்டுள்ளது.
தைவானை சுற்றியுள்ள ஆறு இடங்களை மையமாகக் கொண்ட சீனப் பயிற்சிகள் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானின் வடக்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கில் கடல் மற்றும் வான் கூட்டுப் பயிற்சிகளை தொடர்ந்து நடத்தி வருவதாக சீனாவின் கிழக்கு கட்டளை தளம் தெரிவித்துள்ளது. நிலத் தாக்குதல் மற்றும் கடல் தாக்குதல் திறன்களை சோதிப்பதில் கவனம் செலுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.