
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரும்,இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவருமான சி.ஜெயகாந்த் என்பவரின் அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ விடுதி கடந்த 30 ஆம் திகதி முறையான தேடுதல் அனுமதியின்றி சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த தேடுதலின் போது அலுவலக தேவைக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட எரிபொருள் அனுமதியின்றி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர். ஹேரத் என்பவரால் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள கோரி வடமாகாண இலங்கை நிர்வாக சேவை சங்க உத்தியோகத்தர்கள் மாகாணம் தழுவிய சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு 08.08.2022 அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன்,மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்க வடமாகாண கிளை அறிவித்துள்ளது.