
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்குச் செல்ல முயன்ற 13 பேரில் 8 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மன்னார் நீதவானால் நேற்று சனிக்கிழமை (6) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 13 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினம் (5) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து தொலைவில் உள்ள 6 ஆம் மணல் திட்டில் படகோட்டியினால் இறக்கி விடப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,சிறுமிகள் உள்ளடங்களாக 13 பேர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தலை மன்னார் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நேற்று மதியம் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் மாவட்ட நீதவான் முன்னிலையில் மன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் 8 நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், 5 சிறுவர்களை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள் ஊடாக உரிய பாதுகாவலரிடம் ஒப்படைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் மொறவெவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.