
முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலனின் ஏற்பாட்டில் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றைய தினம் இலவச நடமாடும் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. நானாட்டான் சிவராஜா இந்து வித்தியாலயத்தில் குறித்த நடமாடும் மருத்துவ முகாம் மற்றும் வாசிப்பு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மோட்டக்கடை, அச்சங்குளம், உமநகரி, நறுவிலிக்குளம், இராசமடு, பள்ளங்கோட்டை, இராசமடு, வாழ்க்கை பெற்றான் கண்டல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு, மருத்துவ உதவிகளை பெற்றுக் கொண்டனர். நடமாடும் மருத்துவ முகாம், வைத்திய கலாநிதி எல்மர் எட்வேட், சமூக சேவகர் இ.எட்வின் அமல்ராஜ் மற்றும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் நிதி மற்றும் பங்களிப்புடன் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.