மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டிருப்பதானால், வடக்கில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதைக் கருத்திற்கொண்டு மண்ணெண்ணெய் விநியோகத்தை துரிதமாக விநியோகிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில், சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
‘கடந்த இரண்டு மாத காலமாக வடக்கின் கடற்றொழிலை நம்பி வாழும் மீனவர்களும் விவசாயிகளும் தமது படகுகள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்குத் தேவையான மண்ணெண்ணையினைப் பெற்றுக்கொள்ள முடியாது பெரும் சிரமத்தினை எதிர்நோக்குகின்றனர். இதன் விளைவாக விவசாய மற்றும் கடலுற்பத்தி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நுகர்வு பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு காணப்படுவதினாலும், பொதுமக்களின் பல்வேறு விதமான பிற தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதும், நடைமுறைப் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் மக்கள் பெரும் துயரினை அனுபவிக்கின்றனர். வடக்கின் பெரும்பகுதியான குடும்பங்கள் கடற்றொழில் மற்றும் விவசாயத்தினை நம்பி வாழ்வதாலும் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையிலும், அரசாங்கம் மிகவும் விரைவாக போதுமான அளவிலான மண்ணெண்ணையினை இறக்குமதி செய்து, தடையின்றி விநியோகிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக அவசரமான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.