கௌரவ பிரதமர் அவர்கட்கும், சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் திருகோணேஸ்வரம் தொடர்பான அவசர வேண்டுகோள்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருக்கோவிலாகிய திருக்கோணேஸ்வர திருத்தலத்தை பாதுகாப்பதற்கு உதவுங்கள். ஆலயத்துக்குச் செல்லும் வழியில் 2008க்குப் பின் அவசர அவசரமாக வீதியின் இருமருங்கிலும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் எந்த உத்தரவும் இன்றி தற்காலிக கடைகளை அமைத்தனர்.
அக்கடைகள் தற்போது 58ஆக அதிகரித்துவிட்டது. இக்கடைகள் அமைப்பவர்களுக்கும், திருக்கோணேஸ்வரக் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திட்டமிட்டு ஆலயச்சூழலை ஆக்கிரமிப்பது போல் இக்கடைகள் அமைக்கப்பட்டன.
இது தொடர்பாக திருக்கோணேஸ்வர நிர்வாகம் பல இடங்களிலும் புகார் செய்த போதிலும் எவ்வித பலனும் கிட்டவில்லை. தற்போது திருக்கோணேஸ்வரம் செல்லும் பாதைக்கு அருகில் கோவில் சமதரையில் இவர்களுக்கு நிரந்தர கட்டடம் அமைக்க தொல்லியல் திணைக்களம் திட்டமிட்டு வருகிறது. 03.08.2022 தொல்லியல் திணைக்களத்தினால் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகசபை தலைவரும், செயலாளரும் அழைக்கப்பட்டு தெருவோரம் வர்த்தகம் செய்வோருக்கு கோவிலுக்கு சமீபமாக நிரந்தர கட்டடம் அமைக்க தங்கள் தொல்லியல் திணைக்களம் அனுமதி அளித்துள்ளதாகவும் அதற்கு ஆலயம் சம்மதம் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக தொல்லியல் திணைக்களம் கோணேஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளை தடுத்து வருவதை அனைவரும் அறிவர். தேரோடும் வீதியை அகலிக்க தடுத்தனர், அழிந்துபோன அன்னதான மடத்தை விஸ்தரிக்க தடுத்தனர், வாசலில் பெருங்கோபுரம் கட்டுவதற்கு திணைக்களம் இடையூறுகளை விளைவித்து வருகிறது. தற்போது இந்திய அரசாங்கத்திடம் திருக்கோணேஸ்வரத்தின் பாரிய திருப்பணி வேலைகளை நிறைவேற்றித் தருமாறு ஆலய அறங்காவலர் சபையும், இந்து சமய நிறுவனங்களும் வேண்டுதல் விடுத்து அவை சாதகமாக அமைய உள்ள நேரத்தில் திட்டமிட்டு ஆலய சுற்றாடலை அபகரிக்கும் நோக்கில் நிரந்தர கடைகளை கட்டுவதற்கு முன்வந்துள்ளனர்.