வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருட்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில், ஆலய திருவிழாவின் முதல் மூன்று நாட்களில் மூன்று வெவ்வேறு கடைகளுக்குச் சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை வழங்கி கச்சான், பழங்களை 200 ரூபாய்க்குள் வாங்கி மிகுதி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது நல்லூரடியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை,சந்தேகநபருக்கு போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.