கடந்த 11 நாட்களுக்கு முன்னர் பெய்த அடை மழை காரணமாக நாவலப்பிட்டி கட்டபுல ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போன மூவரில் ஒருவரின் சடலம் நேற்று (11) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கம்பளை மொரகொல்ல மகாவலி ஆற்றின் ஓரிடத்தில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் உறவினர் ஒருவரால் சடலம் அடையாளம் காணப்பட்டது.
36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை, 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை மற்றும் 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று மலையகத்தில் பெய்த அடை மழை காரணமாக கட்டபுல ஓயா பெருக்கெடுத்து ஓடியதால் புதுக்கட்டு மற்றும் அக்கரவத்தையை இணைக்கும் பாலத்தின் மீதும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.
அன்றைய தினம் வேலைகளை முடித்துக்கொண்டு வீடுகளுக்கு வந்த இந்த மூன்று பேரும் பாலத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றின் உதவியால் கடக்க முயன்றபோது பெருகிவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். காணாமல் போன மற்ற இருவரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நீண்ட காலமாக மத்திய மாகாண சபையோ அல்லது கொத்மலை பிரதேச சபையோ இந்தப் பாலம் புனரமைக்கப்படாமல் இருந்ததால் பிரதேசவாசிகளும் கஹவத்தை தோட்டக் கம்பனியும் இணைந்து இதனை நிர்மாணித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்திருந்தனர்.
பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு பாலங்கள் அமைக்குமாறு உள்ளூராட்சி மன்றத்திடமும், மாகாண சபையிடமும் கோரிய போதும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இப்பிரதேசத்தில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.