புலம்பெயர் தமிழர்களின் உதவியை பெறவே தடையை நீக்கியுள்ளோம்: பிரதமர்

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது.
எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்க முடியாது. இதைக் கருத்திற்கொண்டு முதற்கட்டமாகச் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள் தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews