யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் லிட்ரோ எரிவாயு போதாது…! விநியோகஸ்தர்கள்.

யாழ்.மாவட்டத்திற்கு விநியோகிக்கப்படும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் அளவை அதிகரிப்பதற்கு மாவட்ட செயலகம் எரிவாயு நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைக்க வேண்டும். என யாழ்.மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்த்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

கொழும்பில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை சாதாரணமாக பெறமுடிந்த போதிலும் ஏன் யாழ்.மாவட்டத்தில் அவ்வாறு பெற முடியவில்லை என குறித்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு வினவியபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு நிலவியபோது எரிவாயு விநியோகிப்பதற்கு மாவட்டத்தில் சில பகுதிகள் எரிவாயு அதிகம் தேவைப்படும் பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டது.

அந்த பகுதிகளுக்கு எவ்வளவு எரிவாயு சிலின்டர்கள் தேவை என நிர்ணயிக்கப்பட்டதோ அதே அளவிலான எரிவாயு சிலின்டர்களே தற்போதும் ஒதுக்கப்படுகிறது. நல்லூர் பெருந்திருவிழா இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் 

நல்லூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்பு பயன்படுத்தப்பட்ட எரிவாயு அளவிலும் பார்க்க இரட்டிப்பு மடங்கிலான எரிவாயு தேவைப்படுகிறது. மேலும் மாவட்டத்திற்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கின்ற நிலையில்  எரிவாயுவின் தேவைப்பாடு அதிகமாக உணரப்படுகிற நிலையில் வெற்று சிலிண்டர்களின் கேள்வியும் அதிகரித்துள்ளது.

ஆகவே மாவட்டத்திற்கு லிட்ரோ எரிவாயுவின் தேவைப்பாடு முன்பு இருந்ததை விட அதிகமாகும்.

இந்நிலையில் எமது மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைக்கும் பட்சத்தில் அதனை அதிகரித்து பெற்றுக் கொள்ள முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews