முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை தடைசெய்யுமாறு வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது போல பிரித்தானியாவும் விதிக்க வேல்ஸ் அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேல்ஸில் நாடாளுமன்ற உறுப்பினர் பெத் வின்னருடன் இந்த சந்திப்பு நேற்று மாலை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் யுத்தத்தினாலும், சித்திரவதையாலும் பாதிக்கப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறி பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய பலர் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
இதில் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின் தலைவரான சென் கந்தையாவும் கலந்து கொண்டு சிறப்புக்கருத்துக்களை வழங்கியிருந்தார்.
இதன்போது போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய வேண்டுமெனவும் அவர்களை சர்வதேச நீதிமன்றின் முன்னிறுத்துவதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமென வலியுறுத்தப்பட்டது. சவேந்திரசில்வாவிற்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது போல் பிரித்தானியாவும் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட வேல்ஸில் நாடாளுமன்ற உறுப்பினர் பெத் வின்னர் தான் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு இது தொடர்பில் அழுத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் சக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆதரவினை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.