சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் அடுத்த வருடம் முதல் சட்டக் கல்வி – நீதி அமைச்சர் விஜேதாச!

சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு , அடுத்த வருடம் முதல் சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் சட்டக் கல்வியையும் உள்ளடக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு , கொள்ளுப்பிட்டி – மூவன்பிக் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், அரசியலில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை தவிர்த்தல் , ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பெண்களுக்கு இடம்பெறும் வெவ்வேறு நெருக்கடிக்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டு இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உலகில் முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளதோடு, நீதித்துறையில் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் பெண்கள் உயர்ந்த பதவிகளை வகிப்பதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

சட்டம் தொடர்பான அறிவு பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு , அடுத்த வருடம் முதல் சாதாரண தரத்திற்கான பாடப்பரப்பில் சட்டக் கல்வியையும் உள்ளடக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சட்ட ரீதியில் நடைமுறைகளை உருவாக்கும் அதே வேளை, தற்போதுள்ள அரசியல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதற்காக தேர்தல் மற்றும் கட்சி அரசியல் முறைமைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். தற்போதுள்ள அரசியல் முறைமைகளினால் பொறுத்தமான தொழிற்துறையினருக்கும் , பெண்களுக்கும் பாராளுமன்றத்திற்குள்ளும் , அரசியலுக்குள்ளும் பிரவேசிப்பதற்கு இயலாத நிலைமை காணப்படுகிறது.

மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அடிமை மனநிலை , மோசடி அரசியல் உருவாகுவதில் பிரதான காரணியாகவுள்ளது. சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதன் மூலம் துன்புறுத்தல்கள் , வன்முறைகள் அற்ற பெண்கள் உட்பட அனைவருக்கும் தமது உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin