இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க முடியாது…..! சி.அ.யோதிலிங்கம்.

இலங்கைத்தீவு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடியில் அதனுடன் சம்பந்தப்பட்ட
பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு,
இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகியவை தத்தம் நலன்களிலிருந்து செயற்பாடுகளை முடுக்கி
விட்டுள்ளன.

தங்களது இருப்பைப் பேணுவதில் மிகக் கவனமாக இருக்கின்றன. தமிழ்த்தரப்பு
மட்டும் எதுவித அக்கறையுமின்றி ஒதுங்கி நிற்கின்றது.
இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கு கொழும்பை அனுசரித்து செல்லும் அரசியலை
பின்பற்றுகின்றமை, இந்த நெருக்கடி மைதானத்தில் தனித்தரப்பாக பங்கு கொள்ளக் கூடிய
கௌரவமான பங்கு தமிழ்த்தரப்பிற்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளாமை,
தமிழ்த்தேசியஅரசியல் தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலுக்குள் சிக்குப்பட்டமை
என்பன காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இதில் அனுசரிப்பு அரசியல் என்ற காரணியை சென்ற வாரம் பார்த்தோம். இந்த
அனுசரிப்பு எந்த வகையில் தமிழ்த்தேசிய அரசியலின் தொடர்ச்சியைப் பாதித்தது
என்பதையும் அவதானித்தோம். இந்த அனுசரிப்பு அரசியலின் நோக்கம் தமிழ்த்தேசிய
அரசியலை தமிழ்த்தேசிய நீக்கம் செய்யப்ட்ட அரசியலாக மாற்றுவதே! அமெரிக்கா
தலைமையிலான மேற்குலகத்தின் அழுத்தமும் இதற்குக் காரணமாக இருந்திருக்கின்றது.

தமிழ்த்தரப்பு தமிழ்த்தேசிய அரசியலை நீக்கம் செய்து பெருந்தேசியவாதத்தின்
லிபரல் பிரிவுடன் கலந்து விட வேண்டும் என்பதே மேற்குலகின்  எதிர்பார்ப்பாக
இருந்தது.  சுமந்திரன் இதற்காகவே களமிறக்கப்பட்டார். தற்போதும் கூட முழுமையாக
ஊக்கத்துடன் அதனை மேற்கொண்டு வருகின்றார். அவரைத்தமிழ் மக்களின் பிரதிநிதி
என்று கூறுவதை விட பெருந்தேசியவாத லிபரல் பிரிவின் பிரதிநிதி என்றே
கூறலாம். தற்போது சுமந்திரனுடன் கூடவே சாணக்கியனும் இந்த அரசியல்
முன்னெடுப்பில் இறங்கியிருக்கின்றார். தமிழத்தேசியக் கட்சிகளின் அரசியலில்
சுமந்திரனும் சாணக்கியனும் ஒரு பிரிவாகவும், ஏனையவர்கள் இன்னோர் பிரிவாகவும்
இயங்குவதற்கு இதுவே காரணமாகும்.

நீதியரசர் விக்கினேஸ்வரனும் தமிழத்தேசிய நீக்க அரசியலை முன்னெடுப்பார்
என்று கருதியே சம்பந்தனால் களமிறக்கப்பட்டார். ஆரம்பத்தில் சம்பந்தனின்
அரசியல் போக்கோடு விக்கினேஸ்வரன் இணைந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் அவர்
வசிக்கத்தொடங்கியதும் தன்நிலையை மாற்றிக் கொண்டார். அவரது அரசியல் இறங்கு
முகமாகியது என்பது வேறோர் கதை. இந்த அரசியல் போக்கு புலி நீக்கம், தமிழ்த்தேசிய அரசியல் நீக்கம், தமிழ்த்தேசிய சர்வதேச மயமாக்கலை கீழிறக்கல், எதிர்க்கட்சித்தலைவர் பதவி ஏற்பு, ஒற்றையாட்சி அரசியல் யாப்பு உருவாக்க முயற்சி என வளர்ந்து தீர்க்கமான நெருக்கடி
கட்டம் ஏற்பட்ட இன்றைய சூழலில் ஒதுங்கி நிற்றல் என்ற நிலையை நோக்கி
நகர்ந்திருக்கின்றது.

இந்த அனுசரிப்பு அரசியலுடன் கூடவே மேற்குலம் சார்ந்த அரசு சாரா
அமைப்புக்கள் நல்லிணக்கம் என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் களமிறக்கப்பட்டன. அவை
தாயகம் எங்கும் மூளைச்சலவை செய்யும் செயற்பாட்டில் இறங்கியிருந்தன. இன்னோர்
பக்கத்தில் வாள்வெட்டு, கஞ்சா,  போதைவஸ்து கலாச்சாரம், தமிழர் தாயகத்தில்
திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டது. புலிகள் எங்கிருந்தாலும் மணந்து பிடிக்கும்
படையினருக்கு வாள்வெட்டு, கஞ்சா,  போதைவஸ்து கடத்தல்காரர்களை மட்டும் பிடிக்க முடியாத நிலை இருந்தது.  இதை விட படையினர் முன்பள்ளிகளை நடாத்தும் நிலையை நோக்கியும் முன்னேறியிருந்தனர்.

இவ்வாறு ஒரு வேலைத்திட்டமல்ல பல வேலைத்திட்டங்கள் தமிழர் தேசிய நீக்க
அரசியல் நோக்கி நகர்த்தப்பட்டன. இவ்வேலைத்திட்டங்கள் தமிழ்த்தேசிய அரசியலில்
சில அரிப்புக்களை ஏற்படுத்தியது என்பது உண்மை தான். ஆனால் தமிழ்த்தேசியத்தை
முழுமையாக சிதைக்க முடியவில்லை. அவ்வாறு சிதைப்பதற்கு தமிழ்த்தேசியம் மேல் மண்ணில்
வேர்விட்ட மரமல்ல. ஆழ வேரூன்றிய மரம். புலம் பெயர் செயற்பாட்டாளர்களும்
தாயகத்திலுள்ள செயற்பாட்டாளர்களும் மிகவும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினர். தமிழ்
சிவில் சமூக அமையம், தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
போன்றன இந்த கீழிறக்கலை தடுப்பதில் பாரிய பங்களிப்புக்களை வழங்கின. இது வரலாறு
கூட்டமைப்பு ஒதுங்கி நிற்பதற்கு இரண்டாவது காரணம் முன்னரே கூறியது போல இந்த
நெருக்கடி மைதானத்தில் தனித்தரப்பாக பங்கு கொள்ளக் கூடிய கௌரவமான பங்கு
தமிழ்த்தரப்பிற்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளாமை ஆகும்.

இன்னோர் வகையில் இவர்களது கொழும்பு அனுசரிப்பு அரசியல் புரிந்து கொள்ள முயல்வதற்கு
இடமளிக்கவில்லை என்றும் கூறலாம்.  தமிழ் மக்களுக்கு கௌரவமான இடம் உண்டு என்பதற்கு பலகாரணிகள் இருக்கின்றன அதில் முதலாவது தற்கோதைய நெருக்கடியைத் தீர்க்க வேண்டுமாயின் அந்நிய முதலீடுகளை வரவழைக்க வேண்டும். இலங்கையின் ஏற்றுமதியை வளர்த்தெடுத்து அந்நிய செலாவணியை அதிகரிக்க வேண்டும். இதற்கு பிரதான நிபந்தனை நாட்டின் அரசியல் ஸ்திர நிலையாகும்.

இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் அரசியல் ஸ்திரநிலையை ஒரு போதும் உருவாக்க
முடியாது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கேட்டுள்ளது. தற்போதுள்ள இராணுவத்தின் தொகை என்பது இலங்கையின் கொள்ளளவுக்கு மேலானதாகும்.  இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின் ஏதோ ஒரு வகையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

மேற்குலம் பெயருக்கு அரசியல் தீர்வு என்பதை வழங்கி இனப்பிரச்சினையை
நீர்த்து போகச் செய்யவே முயற்சித்தது.   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அதற்காகவே
பயன்படுத்தியது. நல்லாட்சிக்காலத்தில் வடக்கு – கிழக்கு இணைப்பில்லாத ஒற்றையாட்சி
அரசியலமப்பு ஒன்றை அறிமுகப்படுத்த கடும் முயற்சியை அதற்காகவே எடுக்கப்பட்டது.
ஆனால் இன்று அதற்கான சூழல் இல்லை.

தமிழ் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளாக மூன்று தரப்பினர் வளர்ந்துள்ளனர். கூட்டமைப்பினர், கூட்டமைப்பு வெளியே தாயகத்தில் செயற்படும் தமிழ்த்தேசியத்தரப்பினர், புலம்பெயர் சக்திகள் என்போரே அவர்களாவர். இதனால் கூட்டமைப்போடு மட்டும் பேசி பிரச்சினையைத் தீர்க்க முடியாத நிலை உள்ளது.

இரண்டாவது தமிழ் மக்களில் புலம்பெயர் தரப்பினர் பொருளாதார நிலையில்
வலுவாக உள்ளனர். அவர்களுடன் சுமூக உறவைப் பேணுவதன் மூலம் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அவர்களடைய உதவிகளையும் பெற்றுக்ககொள்ளக்கூடியதாக இருக்கும். சர்வதேச சமூகமும் முதலில் புலம் பெயர் மக்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அதற்கான புறச்சூழலை உருவாக்குங்கள் என வற்புறுத்தி வருகின்றது. இந்த வற்புறுத்தல்களினால் தான் சில புலம்பெயர் அமைப்புக்களினதும், தனி நபர்களினதும் தடைகளை ரணில் அரசாங்கம்  நீக்கியது.  தமிழ்ப்புலம்பெயர் சமூகம் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் முதலீடுகள் எதனையும் செய்ய முன்வராது. இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் முதலீடுகளுக்கு  பாதுகாப்பும் கிடைக்காது. தமிழர்கள் சம்பந்தமான கொள்கைகளை மாறி மாறி வரும் சிங்கள அரசாங்கங்கள் அடிக்கடி மாற்றுவதுண்டு. இதனால் இன்னோர் அரசாங்கம் வருகின்ற போது தமது முதலீடுகளுக்கு பாதுகாப்புக் கிடைக்காது என்ற அச்சமும் புலம் பெயர்
தரப்பிற்கு உண்டு.

நல்லாட்சிக்காலத்திலும் சில புலம் பெயர் தரப்புக்களது தடைகள் நீக்கப்பட்டன.
சுமந்திரனின் முயற்சியினால் புலம்பெயர் தரப்புக்களுக்கும் முன்னாள் வெளிவிவகார
அமைச்சர் மங்களசமரவீரவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் இடம் பெற்றன. அரசின்
புதிய யாப்பு முயற்சிகளுக்கும் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தரப்புக்கள்
ஒத்துழைப்புக்களை வழங்கின. இறுதியில் எதுவும் நடக்கவில்லை. ஏனைய புலம்பெயர்
அமைப்புகளது எதிர்ப்புக்களை மீறி நல்லாட்சி அரசிற்கு ஒத்துழைப்பு கொடுத்த
புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  துரோகிப்பட்டங்களும்
அவர்களுக்கு கிடைத்தன. இதனால் இந்தத் தடவை இந்தத் தடை நீக்கத்தை எச்சரிக்கையுடனேயே  பார்க்கின்றன. தடை நீக்கத்தற்கு பெரிய வரவேற்பை அவை கொடுக்கவில்லை இதற்கான எதிர்வினை உலகத்தமிழர் பேரவையிடமிருந்து உடனடியாகவே கிடைத்தது.

ஜெனிவாவை சமாழிப்பதற்காக தடை நீக்கம் நிகழ்துள்ளது என அது கூறியுள்ளது. தங்களது தடையை மட்டும் நீக்கி ஏனையவற்றின் தடையைத் தொடர்வதையும் அவை ஏற்கவில்லை. தவிர தடை நீக்கப்பட்ட அமைப்பக்களைத்தவிர வலுவாகச் செயற்படும் அமைப்புக்கள் வெளியே உள்ளன. மூன்றாவது தற்போது முன்னெப்போதையும் விட புவிசார் அரசியல் போட்டியும்
பூகோள அரசியல் போட்டியும் இலங்கையில் வலுவாக நிலை கொள்ளத்
தொடங்கியமையாகும்.  சீனா ஆய்வுக்கப்பலின் வருகை இந்த மோதலையே
வெளிப்படுத்தியுள்ளது. கடுமையான அழுத்தங்களின் பின்னரே இலங்கை கப்பலை
அனுமதித்ததாகக் கூறப்படுகின்றது.  இலங்கை சீனா உறவுகள் முழுமையாக நிறுத்தப்படும்,
கடன்மறுசீரமைப்பில் ஒத்துழைக்கப்போவதில்லை என்று எச்சரித்ததாகவும்
கூறப்படுகின்றது.

சீனாவில் நடைபெறவிருந்த இலங்கை சுற்றுலா தொடர்பான விளம்பர
நிகழ்வும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த போட்டி மேலும் வளர்வதற்கே வாய்ப்புக்கள்
உண்டு. இவ்வாறு வளருமானால் அவை இனப்பிரச்சினைகளையும் தமக்கு சாதகமாக
கையாளப்பார்க்கும். போட்டியில் நிற்கும் சில தரப்புக்களுக்கு தமது
இருப்பைப்பாதுகாக்கும் கருவியாக தமிழ் மக்களே உள்ளனர்.
நான்காவது இந்தியாவும் மேற்குலகமும் உள்நாட்டில் சந்திக்கும் நெருக்கடிகளாகும்.

இந்தியாவில் தமிழ்நாடு முக்கிய மாநிலம். தமிழ் நாட்டின் கரிசனைகளை முழுமையாக
புறம் தள்ளி இந்திய மத்திய அரசினால் செயற்பட முடியாது. தமிழ் நாட்டில் இலங்கை
இனப்பிரச்சினை ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாகும். அது எப்போதும் நீறு
பூத்த நெருப்பு போல உள்ளே கனன்று கொண்டிருக்கும். எனவே இனப்பிரச்சினையை
ஏதோ ஒரு வகையில் தீர்க்க வேண்டிய தேவை இந்திய மத்திய அரசிற்கும் உள்ளது.

தாயகத்தில் தமிழர்கள் நடாத்துகின்ற போராட்டங்கள் தமிழ் நாட்டிலும் பலத்த அதிர்வுகளை
உருவாக்கும். யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பு போராட்டம்
இடம்பெற்ற போது இந்தியத்தூதுவர் பிரதமர் மகிந்தரை நேரடியாக சந்தித்து
பிரச்சினையை உடனடியாகத் தீர்க்குமாறு கேட்டிருந்தார்.

மேற்குலகத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள் வலிமையாக உள்ளனர். கனடா,
பிரிட்டன், பிரான்ஸ்,  சுவிஸ்லாந்து பொன்ற நாடுகளில் ஒரு அரசியல் சமூகமாகவும்
வளர்ச்சி கண்டுள்ளனர். அவர்கள் தாம் வாழும் அரசுகளுக்குக் கொடுக்கும் அழுத்தங்களும்
நடாத்தும் போராட்டங்களும் இலங்கைக்கும் அழுத்தங்களைக் கொடுக்கும். கனடா மத்திய
அரசாங்கம் இன அழிப்பை ஒரு தீர்மானமாக நிறைவேற்றியது என்பது இங்கு
கவனிக்கத்தக்கது. இலங்கையில் போராட்டங்களை ஒடுக்குவது போல மேற்குலக நாடுகளில்
போராட்டங்களை ஒடுக்க முடியாது. அங்குள்ள அரசியல் கலாச்சாரம் அதற்கு இடம் கொடாது.
எனவே மேற்குலக நாடுகளுக்கும் தங்களது நாடுகளது அமைதி கருதி இனப்பிரச்சினையைத்
தீர்க்க வேண்டிய தேவை உள்ளது.

இந்தக் காரணிகள் எல்லாம் சேர்ந்து தான் கோட்பாட்டு ரீதியாக நெருக்கடி
மைதானத்தில் ஒரு தரப்பாக தமிழ் மக்களளை அடையாளப்படுத்துகின்றது. கூட்டமைப்பு
இதனைப்புரிந்து கொள்ளாதது கவலைக்குரியது.
ஒதுங்கி நிற்பதற்கான மூன்றாவது காரணியான தேர்தல் கட்சி அரசியலுக்குள்
தமிழ்த்தேசிய அரசியல் மாட்டுப்பட்டிருப்பதை அடுத்தவாரம் பார்ப்போம்.

Recommended For You

About the Author: admin