நல்லுார் ஆலய சூழலில் கடமையில் ஈடுபடவுள்ள யாழ்.மாநகரசபையின் நீல சட்டை ஊழியர்கள்..! மாநகர முதல்வர் அறிவிப்பு.. |

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா காலத்தில் நீல நிறத்திலான உடையணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் மஹோற்சவம் தொடர்பான ஊடக சந்திப்பொன்று நேற்று முன் தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆலய பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெற்ற நல்லூர் மஹோற்சவம் தற்போது மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நாட்களில் விசேட திருவிழாக்கள் இடம்பெறவுள்ளமையால்,

அதிகளவானோர் ஆலயத்திற்க்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதானல், நீல உடை அணிந்த யாழ்.மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணித்து ,  வீதி ஒழுங்குகளை பேணி போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கும் விதமாக செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள், அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் குப்பைகளை கொட்டுதல் , துப்புதல் போன்றவற்றை தடுத்து தூய்மையான மாநகரத்தை பேணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மாநகர சபையின் விசேட அணியின் ஆடைகள்  விடுதலைப்புலிகளின் காவல்துறையினரின் ஆடையை ஒத்த ஆடை என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்.மாநகர சபை முதல்வரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கில் இருந்து முதல்வரை விடுவித்த நீதிமன்று ,  வழக்கினையும் தள்ளுபடி செய்தது அத்துடன் சான்று பொருட்களாக கைப்பற்றப்பட்டு இருந்த ஆடைகளையும் மீள கையளிக்க நீதிமன்று கட்டளையிட்டது.

இந்நிலையிலையே நீல ஆடை அணிந்த விசேட அணியினர் மீண்டும் தமது கடமைகளை தொடரவுள்ளனர்.

Recommended For You

About the Author: admin