சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு திட்டம் இன்னமும் உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் ஆகிய நோக்கங்களுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு குறித்த திட்டம் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும், நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் இந்த திட்டத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் அதிகாரபூர்வமாக இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே கடன் தருனர்களிடம் பேச முடியும் என மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க நேற்றைய தினம் சர்வதேச ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டிருந்தார்.
எனினும் கடன் தருனர்களுடன் இதுவரையில் அதிகாரபூர்வமாக தொடர்பு கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக பெற்றுக் கொள்ளும் முனைப்புக்கள் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.