
கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி பயிலும் 13 வயதான மாணவன் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய நாக பாம்பு குட்டி இருந்த சம்பவம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.
கடவத்தையை சேர்ந்த இந்த மாணவன், பாடசாலை பேருந்தில் பாடசாலைக்கு வந்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த காலணிகளில் ஒன்றில் ஏதோ ஒன்று நெளிவது போல் உணர்ந்துள்ளதுடன் பாடசாலைக்கு சென்றதும் காலணியை கழற்றியுள்ளார். அப்போது காலணிக்குள் இருந்த நாக பாம்பு குட்டி வெளியில் வந்துள்ளது.
எனினும் பாம்பின் விஷம் மாணவனின் உடலில் பரவவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதாக சிமாட்டி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
காலணிகள் வீட்டில் இருந்த போது நாக பாம்பு குட்டி அதற்குள் சென்றிருக்கலாம் எனவும் மாணவன் பாம்பு குட்டி இருப்பது தெரியாமல் காலணியை அணிந்து பாடசாலைக்கு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பிள்ளைகள் காலணிகளை அணியும் முன்னர் அவற்றுக்குள் ஏதேனும் இருக்கின்றதா என்பதை பார்த்து அணியும் வகையில் பெற்றோர் அவர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.