சைவத்தமிழ் ஏடு #சைவமுரசு தமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக இன்று இடம் பெறவுள்ளது என தமிழ் சைவ பேரவையில் சைவத்தமிழ் ஏடு அாசிரியர் பீடம் குறிப்பிட்டுள்ளது.
அவர்கள் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
தமிழ்ச் சைவத்தை பற்றிய ஆழமான புரிதலை இலகுவான முறையில் எம் நாயன்மார் வாழ்ந்து காட்டிய வழி முறைகளோடு இளையோருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த சைவத் தமிழ் இரு திங்கள் ஏடு தமிழ்ச் சைவப் பேரவை வெளியீடாக நல்லைக் கந்தனின் பெருந்திருவிழா நாட்களில் மலர்கின்றது.
இறை ஆகமம் திருமந்திரம், இறை வேதம் தேவார , திருவாசகங்கள் உள்ளிட்ட சைவத் தமிழ் நூல்களில் மிக ஆழமான மெய்யியல் கருத்துக்களும் அதனைக் கடந்து வாழ்வியல் தரிசனங்களும் மிகவும் அழகாக கூறப்பட்டுள்ளன. அவற்றை பல்வேறு பரிணாமங்களில் இந்த ஏடு வெளிகொணர உள்ளது.
ஈழத்தின் சைவத் தமிழ் வரலாற்று பொக்கிசங்கள் மீது இளையோருக்கு விழிப்புணர்வை, பற்றுதலை ஏற்படுத்துவதும் இந்த சஞ்சிகையின் இன்னோர் நோக்கமாகும்.
சுருங்க கூறின் சீரிய சிவநெறிச் சிந்தனைகள் ஊடாக ஒழுக்கமிக்க அறநெறிப் பண்புடைய வளமான சைவத் தமிழ் சமுதாயத்தை கட்டி எழுப்புவதே இந்த பருவ ஏட்டின் தூர நோக்கு ஆகும்.
அனைத்து சைவத் தமிழர்களும் இதற்கு பேராதரவு தர வேண்டும் என்பதும் குறிப்பாக எதிர்கால தலைவர்களாகிய குழந்தைகளுக்கு இதனை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதும் தமிழ்ச் சைவப் பேரவையின் சைவ முரசு ஆசிரிய பீடத்தின் பேரவாவாகும்.
அதற்கு இறை சிவன் அருளை பிரார்த்தித்து நிற்கின்றோம்.
தமிழ் எங்கள் மொழி சைவம் எங்கள் வழி
ஆசிரிய பீடம்
சைவ முரசு
தமிழ்ச் சைவப் பேரவை