வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம்….! செல்வம் பா.உ.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்தை தயவு செய்து அரசியல் ஆக்காதீர்கள் என நாடளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவுகளிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

வவுனியாவில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

”காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றேன்.

இது ஒரு புனிதமான போராட்டம். ஐ.நா சபையிலே இன்றும் எங்களுடைய கருத்துக்கள் உயிரோடு இருக்கின்றது என்றால் உங்களுடைய போராட்டத்தின் பின்னணிதான் காரணம். தொடர்ச்சியாக இரண்டாயிரம் நாட்களை கடந்திருக்கின்றது.

உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்ற 110 உறவுகள் இறந்திருக்கின்றார்கள். தயவு செய்து இந்த போரட்டத்தை அரசியல் ஆக்காதீர்கள். புனிதமான போராட்டத்திற்க்கு  எல்லோரையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு வாய்ப்பை உருவாக்குங்கள்.

இந்த போரட்டத்தில் உங்களோடு நாங்கள் நிற்போம். ஐ.நா வரைக்கும் அல்லது அதற்கு மேலே செல்ல வேண்டும் என்றாலும் நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிதான் காணாமல் போன உறவுகளுக்கான காரியாலயம் உருவாக்கப்லட்டது. அது நம்பிக்கையற்று போய்விட்டது. நாங்களும் குறை கூறுகின்றோம்.

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உள்ளடக்கப்பட்ட நிலையிலேதான் நம்பிக்கையோடு எங்களுடைய உறவுகள் வந்து துணிச்சலாக பதில் கூற முடியும்.

எங்களுடைய போராட்டத்தை எல்லோரும் ஒருமித்து செய்யக்கூடிய பலத்தை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ணுங்கள். உங்களுக்கு பின்னாலே நாங்கள் நிச்சயமாக தொடர்ந்து பயணிப்போம் என்பதனை கூறிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Recommended For You

About the Author: admin