கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ மன்னாரில் போராட்டம்.

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ போராட்டத்தின் 25 ஆவது நாள் போராட்டம்,  இன்று, மன்னார் துள்ளு குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றது.

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில், 100 நாட்கள் நடைபெறுகின்ற செயல் திட்டத்தின், 25 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம், மன்னாரில் இடம்பெற்றது.

வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்கமைப்பில்,   அதன் இணைப்பாளர் சகாயம் திலீபன் தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில், மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, துள்ளு குடியிருப்பு பகுதியில், போராட்டம் இடம்பெற்றது.

இதில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, சட்டத்தரணி சர்மிலன் டயஸ் மற்றும் கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது, 100 நாள் செயற் திட்டத்திற்கான பொது மகஜர், மக்களால் வாசிக்கப்பட்டதுடன், அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான சாதக பாதக விளைவுகள் தொடர்பில், சட்டத்தரணி சர்மிலன் டயஸ், மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, அரசியல் தீர்வு விடயத்தில், மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews