நல்லூரானின் தேர்த் திருவிழாவில் தியாகி திலீபன் நினைவிடத்தில் தாகசாந்தி….!

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாக தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு நல்லைக்கந்தனை நாடிவந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகம் தணிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரால் கடந்த இரண்டு வாரங்களாக நல்லூர் கந்தசுவாமி கோவில் பின் வீதியில் உள்ள தியாக தீபம் நினைவுத்தூவி புனரமைக்கப்பட்டு, சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்டு, தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவப்படத்துடன் பதாகை காட்சிப்படுத்தி இவ்வாறு தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டு அடியவர்கள் உள்ளம் குளிர வைக்கப்பட்டது.

நல்லைக் கந்தனைத் தேரில் தரிசிக்க வந்த பக்தர்கள், தியாக தீபம் திலீபன் அவர்களின் தாக சாந்தி நிலையத்தில் தமது தாகத்தை தணித்ததுடன் தீராத் தாகத்துடன் உள்ள தியாகி திலீபன் அவர்களின் நினைவுத்தூபியில் மலர் தூபி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன்  தலைமையில், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி
புனரமைக்கப்பட்டு நேற்று காலை 06. 45 மணியளவில் தியாகி திலீபன் நினைவாலயத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் முக்கிய உறுப்பினர்கள், யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையினரால் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: admin