
சுமார் 3.8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது இலங்கை பிரஜைகள் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஹைதராபாத் சுங்கத்தின் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-175 இல் வந்த ஒன்பது பயணிகளை இடைமறித்து, நூதனமாக முறையில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை கண்டறிந்தனர்.
மீட்கப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 7.304 கிலோ ஆகும். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 450-700 கிராம் தங்கத்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு நபரும் தனித்தனியாக கடத்திச் சென்ற தங்கத்தின் மதிப்பு 50 லட்சத்தை தாண்டாததால், விசாரணைக்கு ஒத்துழைக்க நோட்டீஸ் அனுப்பிய பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் கடந்த மாதமும் ஹைதராபாத் சென்றிருந்ததாக கூறப்படுகின்றது.
சந்தேகத்தின் பேரில், அவர்களது உடைமைகளை ஆய்வு செய்து விசாரித்தோம். அவர்கள் ஹைதராபாத் செல்வதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் இல்லை. சிலர் சுற்றுலா விசாக்களில் இருந்தனர், மற்றவர்களுக்கு வணிக விசாக்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.