கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட கருமபீடமொன்று திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்காகவே இந்த விசேட திட்டம் கொண்டு வரப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய லங்கா ரெமிட் மொபைல் செயலி வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பேச்சாளரும் பிரதி பொது முகாமையாளருமான காமினி செனரத் யாப்பா மேலும் கூறுகையில், லங்கா ரெமிட் மொபைல் செயலியின் பயன்பாடு முறைசாரா வழிகளில் வெளிநாட்டுப் பணம் இலங்கைக்கு அனுப்பப்படுவதைக் குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
2022 பெப்ரவரியில் இலங்கை மத்திய வங்கி, “லங்கா ரெமிட்” என்ற தேசிய பணவனுப்பும் மொபைல் செயலியை ஆரம்பித்து வைத்தது.
இலங்கை மத்திய வங்கி தற்போது இலங்கைக்கு வெளிநாட்டுப் பணவனுப்பல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று நாட்டிற்கு பணம் அனுப்பும் போது முறையான பணவனுப்பல் வழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
லங்கா கிளியர் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தால் “லங்கா ரெமிட்” உருவாக்கப்பட்டுள்ளது. “லங்கா ரெமிட்” தேசிய பணவனுப்பல் மொபைல் செயலியானது வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தற்போதுள்ள பணவனுப்பல் வழிகளுக்கான நேரடி அணுகலை வழங்குகிறது.
“லங்கா ரெமிட்டுடன்” இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி பிஎல்சி, ஹட்டன் நேஷனல் வங்கி பிஎல்சி, தேசிய சேமிப்பு வங்கி, கொமர்ஷல் வங்கி பிஎல்சி, நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி, கார்கில்ஸ் வங்கி லிமிடெட், மொபிடெல் பிரைவட் லிமிடெட் மற்றும் டயலொக் ஆக்ஸியட்டா பிஎல்சி ஆகியவை ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள அதேவேளை ஏனைய பணவனுப்பல் பணி வழங்குநர்கள் எதிர்வரும் காலத்தில் இணைவரென எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.
“லங்கா ரெமிட்” பயனர்களின் சுய-பதிவு, உலகளாவிய பணப்பரிமாற்ற தொழிற்படுத்துநர்களுடன் இணைக்கும் திறன் மற்றும் உலகளாவிய பின்டெக் போன்ற அம்சங்களை உள்ளடக்கி, எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கையில் உள்ள எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும்/செல்லிடப் பணப்பைக்கும் உடனடி நிதிப் பரிமாற்றல் மூலம் பணவனுப்பலை வசதிப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றது.