சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றங்கள் எவையும் ஏற்படாத நிலையில், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் மீண்டும் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது சிறிலங்கா அரசாங்கத்தின் மின் கட்டண திருத்தம், மதுவரிச் சட்டம் போன்றவற்றின் சீர்திருத்த முன்மொழிவுகளைக் கோரியுள்ள நாணய நிதியம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதனை வழங்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடனான மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இன்று பிற்பகல் அதிபர் அலுவலகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இணையவழி ஊடாக ரணில் விக்ரமசிங்க நாணய நிதியப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் இரு தரப்பினரும் சாதகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் மின் கட்டணத் திருத்தம், கலால் சட்டம் போன்ற கூடுதல் தகவல்களுக்கு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறு கோரப்பட்ட தகவல்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் வழங்குமாறும் கோரியுள்ளது.
ஏற்கனவே கடந்த புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கவை சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் நேரடியாக சந்தித்திருந்த போதிலும் சாதகமாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படும் நிலையில், இந்தக் கலந்துரையாடலை ரணில் விக்ரமசிங்க, இணைய வழி தொழல்நுட்பத்தின் ஊடாக நடத்தியுள்ளார்.
இதில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர், பிரதித் தலைவர் மசாஹிரோ நோசாகி, சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவுக்கான நிரந்தரப் பிரதிநிதி மற்றும் அதிபரின் தலைமை அதிகாரியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.