அரசாங்கத்திற்கு பாரிய சுமையாக மாறியுள்ள அமைச்சர்கள்! சபாநாயகருக்கு சென்ற அவசர கடிதம்

வீட்டுக்கொடுப்பனவை செலுத்தத்தவறிய அமைச்சர்களின் நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க உடனடியாக தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வீட்டு வாடகை, மின் மற்றும் குடிநீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறியுள்ள எம்.பிக்களிடம் இருந்து நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர், மின்சாரக் கட்டணம் மற்றும் வீட்டு வாடகை செலுத்துவதில் தவறிழைத்த அமைச்சர்கள் தொடர்பில் நாடாளுமன்றக் குழுக்களின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அமைச்சர்களின் எண்ணிக்கை 60ஐ நெருங்கியுள்ளதுடன், மேற்படி அமைச்சர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பத்து அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்திய குடியிருப்புகளுக்கான வாடகையை செலுத்த தவறியுள்ளதாகவும்,இது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin