இலங்கையில், தற்போது 170 ரூபா முதல் 190 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு இறாத்தல் பாணின் விலையை எதிர்வரும் காலங்களில் 250 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை ஒரு கிலோ கிராமுக்கு 350 ரூபா என்ற மட்டத்தில் காணப்படுகிறது.
இதன் காரணமாக காரணமாக பாண் உட்பட வெதுப்பக உணவுகளின் விலைகளில் மீண்டும் திருத்தம் செய்ய நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளமை மற்றும் கோதுமை மாவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக வெதுப்பகங்களின் உரிமையாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்கள் ஏற்கனவே தமது இறக்குமதிகளை இடைநிறுத்தியுள்ளன.
இதேவேளை இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமை நீடித்தால் உணவு மற்றும் உணவுகள் அல்லாத பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.