சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது

ஆட்கடத்தற்காரர்களின் பொய்யான கருத்துக்களை நம்பிக்கொண்டு பிற நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை காணமுடிகின்றது.

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து,சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளில் நேற்றிரவு(28) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கடற்படையினரின் பொறுப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலைக்கு அப்பால் சந்தேகத்துக்கிடமாக பயணித்த மீன்பிடி படகு ஒன்று, கடற்படையின் P-465 என்ற விரைவு படகால் இடைமறிக்கப்பட்டதுடன், அதிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 29 பேர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் உட்பட 25 ஆண்களும், 18 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், P-465 விரைவு படகின் மூலம் மேற்கொண்ட தொடர் சோதனையில் குறித்த மீன்பிடி படகுக்கு கரையிலிருந்து நபர்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் குச்சவெளியைச் சேர்ந்த இருவர் படகு ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அதே கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் பயணித்த மற்றொரு இலங்கையைச் சேர்ந்த பல நாள் மீன்பிடி படகு ஒன்றைக் கடற்படையின் P-4443 என்ற விரைவு படகு மூலம் இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் இடம்பெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 5 ஆண்கள் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும், P-4443 விரைவு படகு மூலம் மேற்கொண்ட சோதனையில், லங்காபட்டுன – வாழைத்தோட்டம் கடற்கரையில், சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்லும் நோக்கத்தில் நின்றிருந்ததாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மொத்த சுற்றிவளைப்புகளில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டவர்கள், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, வாழைச்சேனை, கல்முனை, அக்கறைப்பற்று மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருகோணமலை கடற்பகுதியில் கைதான 34 பேரும் திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் கைதான இருவரும் குச்சவெளிப் பொலிஸாரிடமும், வாழைத்தோட்டம் கடற்கரையில் கைதான 10 பேரும் ஈச்சிலம்பற்றுப் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் இன்று(29) இடம்பெற்றுள்ளது.

இதன்போது 17 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முற்றபட்டதாக கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin