
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி ஒருவரின் கார் கனவுக்காக 600 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
600 லட்சம் ரொக்கமாக செலுத்தி புதிய பென்ஸ் கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்கிறது. நாடு திவாலாகி, மக்கள் திவாலாகும் நிலையில், மக்களின் துன்பத்தைப் போக்குவதற்காக, அனைத்து தியாகங்களையும் செய்வதாக கூறி பதவிகளை ஏற்றவர்களின் இவ்வாறான செயல் அதிர்ச்சியளிப்பதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடன் தவணை செலுத்த முடியாமல், அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாமல், பெரும் டொலர் நெருக்கடிக்கு முகம் கொடுத்து, நாடு திவால் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சில அரசியல்வாதிகளுக்கும், சில உயர் அரச அதிகாரிகளுக்கும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு எரிபொருள் கப்பலுக்குத் தேவையான டொலர்களைக் கண்டுபிடிப்பது முடியாத நிலையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரசாங்க அதிகாரிகளின் கார் கனவுகளை நிறைவேற்ற தேவையான டொலர்கள் இலகுவாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.