சிங்கராஜா வனத்திற்கு அருகாமையில் தனக்கு சொந்தமான பங்குதாரர் சொத்து இருப்பதாகவும், அனைத்து சட்ட தேவைகளையும் பூர்த்தி செய்த பின்னரே ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக நீதி விசாரணையை ஆரம்பிக்க முடியும் எனவும் ரோஹித ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஹோட்டல் குறித்த உண்மையைக் கண்டறியுமாறு அனைத்து தரப்பு போராட்ட இயக்கத்தின் பேச்சாளர் நிராஷன் விதானகே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி, அந்த உல்லாச விடுதி ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், முறையான வருமானம் இல்லாத ரோஹித ராஜபக்ச ஹோட்டலை எவ்வாறு வைத்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, நிர்மாணப் பணியின் போது இந்த விடுதி பாரிய சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், விடுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எங்கு செல்கிறது என்பது குறித்து கவலையடைவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியில் பண்டாரகம் அமைப்பார் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் தமது பிரிவினர் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என ரோஹித ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ரோஹித ராஜபக்சவுக்கு சொந்தமான சொகுசு விடுதி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் குழுவினரால் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
சிங்கராஜா வனத்திற்கு அருகாமையில் கொலன்னா, எம்பிலிப்பிட்டிய கொங்கலகந்தவில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டல் ஒன்று மே 10 அன்று போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. இந்நிலையிலேயே, குறித்த சொகுசு விடுதி ரோஹித ராஜபக்சவிற்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.