இலங்கையில் 10 இலட்சம் அரச ஊழியர்கள் செயற்றிறன் அற்றவர்கள்…!அமைச்சர் ரொஷான் ரணசிங்க.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள 16 இலட்சம் அரச ஊழியர்களில், 10 இலட்சம் அரச ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது.

அரச சேவையிலுள்ள ஊழியர்களால் விமர்சனங்கள் முன்வைக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசியலை போன்றே, அரச ஊழியர்களும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாம் பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளோம்.

அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மிக வேகமாக வளர்ச்சியடைய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பது அவசியம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மை என்பன வழிவகுப்பதாக சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் ஆகியவற்றில் திறமையான பணியாளர்கள் இருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் திறமையற்றவர்கள்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றில் 4200 பேருக்கு பதிலாக, அங்குள்ள 500 பணியாளர்களால் திறமையாக பணியாற்ற முடியும்.

இதேவேளை, மின்சார சபையில் உள்ள 26,000 பணியாளர்களிற்கு பதிலாக அதிலுள்ள அரைவாசி பணியாளர்களால் திறமையாக பணியாற்ற முடியும். மேலும், திறமையற்ற உறுப்பினர்களால் தொழிற்சங்கங்கள் வளர்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரச சேவையில் எந்த வேலையும் இல்லாத 100,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்திருந்தார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கினர் தொழிலாளர்கள், சாரதிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள். அரச சேவையில் குறிப்பிட்ட நிரந்தர பொறுப்பின்றி ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்கள் இருக்கின்றனர்.

தற்போதுள்ள அரச ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை பேண முடியும். குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது.

 

உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: admin