அரசாங்க வங்கிகளின் மொத்த பங்குரிமைகளில் 20 சதவீதத்தினை குறித்த வங்கிகளின் வைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார்.
இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பொருளாதார நெருக்கடி, வட்டி விகித அதிகரிப்பு, கடன் மீள் அறவீட்டில் சிரமம், கடன் பெற்ற தொழில் முயற்சிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளினால் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றுக்கு ஏற்பட்ட பாதிப்பினை குறைப்பதற்கும் இரண்டு வங்கிகளினதும் திரவத்தன்மை பிரச்சினைகளை குறைக்க புதிய மூலதன வசதியினை வழங்க வேண்டியுள்ளது.
இதனால் குறித்த இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றுக்கு உரித்துடைய முழு பங்குகளில் 20 சதவீதத்தினை வங்கிகளின் வைப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு முன்மொழியப்படுகிறது.
அரச நிதியீட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுவதனால் அரச வங்கிகளுக்கு மேலதிக மூலதனத்தினை வழங்குவதற்கு இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்குள்ள வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.