ரம்புக்கன, பின்னவல பிரதேசத்தில் உள்ள உயர்தர மாணவன் ஒருவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞனின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்முறை வெளியாகியிருந்த நிலையில், முடிவுகள் வெளியாகும் போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கலைப் பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றிய இம்மாணவன் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண்களின் பேஷன் மற்றும் ஆடைகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் முகநூல் கணக்கு பக்கத்தையும், பெண்களின் பெயரில் முகநூல் குழுக்கள் மற்றும் முகநூல் கணக்குகளையும் குறித்த மாணவன் பராமரித்து வந்ததாக சிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.
பெண்கள் மற்றும் மாணவிகளின் முகநூல் கணக்குகளுக்குள் மோசடியாக ஊடுருவி, பேஷன் மற்றும் உள்ளாடைகளை ஒன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த ஓடரை அவர் பதிவிடும்போது, ஒவ்வொரு பெண்ணின் கைபேசி இலக்கத்துக்கும் அனுப்பிய லிங்க் மூலம் அணுகி, அந்த கணக்குகளில் மெசஞ்சர் செய்திகள் மூலம் அவர்கள் பரிமாறிக்கொண்ட மிகத் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேகரித்து வந்துள்ளார்.
மேலும், ஒன்லைன் வேலைகள், வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பகுதி நேர வேலைகள் போன்றவற்றை வழங்குவதாகக் கூறி முகநூல் பக்கத்தில் பணம் தேவைப்படும் இளம் பெண்கள், பெண்கள் மற்றும் மாணவிகளை தொடர்பு கொண்டு மோசடியான முறையில் புகைப்படம் எடுப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
பெண்களின் முகநூல் கணக்கு மூலம் இளம் பெண்களுடன் நட்புறவு கொண்டு, மேற்படி மோசடியில் சிக்கிய இளம் பெண்களுக்கு அவர்களின் தனிப்பட்ட, நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மிரட்டி மேலும் புகைப்படங்களை சேகரித்துள்ளார்.
இந்த மாணவன் சில காலமாக செய்து வரும் இந்த சைபர் குற்றத்தின் மூலம் அவர் சேகரித்த 600க்கும் மேற்பட்ட நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்ய முடிந்துள்ளது.
இதுபோன்ற புகைப்படங்களை சேகரித்தவர்களில் பாடசாலை மாணவிகள், பெண்கள், இளம்பெண்கள் அடங்குவதாகவும், காதலனுக்கு பரிசு, உடைகள், செல்போன்கள் போன்றவற்றை வாங்கித் தர முயன்றவர்களும் இருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மோசடி அல்லது இது போன்ற மோசடிகளில் யாராவது சிக்கியிருந்தால், உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஏதேனும் ஒன்லைனில் ஓடர் செய்தாலோ அல்லது அத்தகைய பக்கங்களைக் கையாள்வதாலோ அந்த நேரத்தில் பெறப்பட்ட செய்திகளைச் சரிபார்ப்பதில் மிகவும் கவனமாக இருக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.