இன்றும் முக்கிய பேச்சுவார்த்தையில் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்!

சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அதிபர் ரணில் விக்ரமசிங்க, இணையவழி காணொளி முறையில் அதில் பங்கேற்றிருந்தார்.

மின் கட்டணத் திருத்தம் மற்றும் மதுவரிச் சட்டம் உள்ளிட்ட திறைசேரி தொடர்பான இந்தக் கலந்துரையாடலில், தேவையான மேலதிக தகவல்களை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன், பணிக்குழாம் மட்ட இணக்கப்பாட்டை விரைந்து எட்டுவதற்கு இயலுமை கிடைக்கும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

கடனை எதிர்பார்க்கும் நாட்டுக்கு பொருத்தமான பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin