
தேசிய வீரர் மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் எனும் பெயர்ப்பலகை வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 4 நாட்களின் பின் நீக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தேசிய மாவீரன் பண்டார வன்னியனின் 219 ஞாபகார்த்த விழாவினை முன்னிட்டு வவுனியா நகரசபையினரினால் கடந்த 25ஆம் திகதி நகர மத்தியில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியன் சதுக்கம் என பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெயர்ப் பலகை திறந்து வைக்கப்பட்டு 4 நாட்கள் கடந்த நிலையில், 29ஆம் திகதி குறித்த பெயர்ப் பலகை வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களினால் அகற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபடுபவர்களிடம் கேட்ட போது, குறித்த வீதி செப்பனிடப்படும் பணிகள் எமது நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அபிவிருத்தி பணிகளுக்கு இடையூரான நிலையில் குறித்த பெயர்ப் பலகை காணப்பட்டமையினால் அதனை நாம் அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா நகரசபையினரிடம் கேட்ட போது, வீதி அபிவிருத்தி பணிக்காக பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளதுடன், பணிகள் நிறைவடைந்த பின்னர் முன்னைய பெயர்ப் பலகையினை விட சிறப்பான ஓர் பெயர்ப் பலகையினை அப்பகுதியில் வைப்பதற்குரிய நடவடிக்கையினை தாம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெறுகின்றதாக தெரிந்தும் அவசரமாக பெயர்ப் பலகையினை திறந்து 4 நாட்களில் அது அகற்றப்பட்டமை மக்கள் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளதுடன், சபை நிதியும் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.