தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூட்சமமான முறையில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இன்று தருமபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலைய 24 மணி நேர குற்றச் செயல்களை தடுக்கும் கடமையில் ஈடுபட்டுகொண்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கல்லாண்டார் பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய 2டிப்பர்களும், அதன் சாரதிகளும் மற்றும் புளியம்போக்கணை பகுதியில் 01டிப்பரும், தருமபுரம் பகுதியில் 1 டிப்பரும், கல்மடு பகுதியில் ஒரு 1 உழவு இயந்திரம் ,அதன் சாரதியும் மற்றும் 01 டிப்பரும் கல்மடுபகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலைககளை தமது வாகனங்களில் காட்சிப்படுத்தி குறித்த மண்கடத்தல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளும் நடைபெற்று பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்பொழுது சூட்சமமான முறையில் மணல் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் தற்பொழுது வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகா நிறுவனம், மற்றும் R.Rநிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் என பெயர் பலகைகள் பொறிக்கப்பட்டு டிப்பர் வாகனத்தில் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டே வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படவிருந்த நிலையிலேயே இன்றைய சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளதாக தருமபுரம் பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.