இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.
உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டின் படி, உணவுப் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் லெபனான் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் துருக்கி ஆகியவை உள்ளன.
பட்டியலில் ஐந்தாவது இடத்திலுள்ள இலங்கைக்கு அடுத்தபடியாக ஈரான், ஆர்ஜென்டினா, சூரினாம், எத்தியோப்பியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் உள்ளன.
இலங்கையில் உரத் தட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்தி 40 வீதம் முதல் 50 வீதம் வரை குறைந்துள்ளதாகவும், உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வானது உலகளாவிய நெருக்கடியைத் தூண்டியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது மில்லியன் கணக்கான மக்களைக் கடுமையான வறுமையில் தள்ளும், பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பெரிதாக்கும். அத்துடன் ஆதாயங்களை அழித்து விடும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.