குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ அதிகாரியும் குறித்த நபரை தாக்குவதை அவதானித்து அவரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தி அறிவிக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அணிவகுப்பின் வாரியபொல முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்டினன் கேணல் பிரதி விராஜ் குமாரசிங்கவுக்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் பிரதீப் அத்தநாயக்க என்ற நபரே தாக்கப்பட்டுள்ளார்.
யக்கபிஹிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவரை எட்டி உதைத்ததாக இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிய செய்தி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.