
நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்து பயணித்தவர் விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். வேலணை 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெகதீபன் தனுசியன் (வயது 18) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வாரம் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் தனது நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கடைக்கு பயணித்துள்ள நிலையில் இருவரும் தலைக்கவசமும் அணியாது பயணித்துள்ளனர்.
இதன்போது நண்பருக்கு சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லாத நிலையில் இவர் மதுபோதையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் இவர்கள் சென்றபோது, வாகனம் மதிலுடன் மோதியது எனவும், பின்னால் பயணித்தவர் தூக்கி வீசப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின்போது வாகனத்தை ஓட்டியவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.