2020 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத திறமையைற்ற நிர்வாகமாக தற்போதைய யாழ் மாநகர நிர்வாகம் செயற்பட்டு வருகிறது.
யாழ் பருத்தித்துறை வீதியில் விபத்துக்குள்ளான குறித்த தீயணைப்பு வாகனம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு யாழ் மாநகர சபை வளாகத்தில் பத்திரமாக மூடி கட்டப்பட்ட நிலையில் உள்ளது.
குறித்த வாகனம் கொள்வனவு செய்யப்பட்டபோது அதன் பெறுமதி சுமார் 3கோடிக்கு அதிகமாக காணப்பட்ட நிலையில் 2004ல் அப்போதைய யாழ் மாநகர நிர்வாகம் சுமார் 90 இலட்சம் ரூபாய்க்கு காப்புறுதி செய்யப்பட்டது.
இவ்வாறான நிலையில் விபத்துக்குள்ளான வாகனத்திற்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை காப்புறுதி தருவதாக கொழும்பு நிறுவனம் தெரிவித்த நிலையில் குறித்த வாகனத்தை மீள புனரமைப்பதற்கு சுமார் 90 லட்சம் ரூபாய் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
யாழ் மாநகர நிர்வாகம் குறித்த காப்புறுதி நிறுவனத்திடம் அதிகரித்த கொடுப்பனவை எதிர்பார்த்து தீயணைப்பு வாகனத்தை மீள புனரமைக்காமல் காலம் கடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
நல்லூர் ஆலய உற்சவங்களின் போது சாதாரண கச்சான் கடை ஒன்றுக்கு 25 தினங்களுக்கு சுமார் ஒரு 1இலட்சம் ரூபாய் வரை அற விட்ட நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வரி செலுத்தும் மக்களுக்காக தீ அணைப்பு வாகனத்திற்கு 30 இலட்சம் ரூபாய்க்களை செலவு செய்யாமல் மாநகர சபை காலம் கடத்திவருகிறது.
காப்புறுதில் குறைவான தொகையை செலுத்திய மாநகர நிர்வாகம் தற்போது அதன் பெறுமதியை அதிகரித்து எதிர்பார்ப்பது எவ்வாறு என கேள்வி எழுவதுடன் அதன் பின்னர் பொறுப்பேற்ற ஆணையாளர் ஏன் குறித்த வாகனத்தின் பெறுமதியை திருத்தம் செய்ய காப்புறுதி நிறுவனத்துடன் ஏன்? முயற்சிக்கவில்லை என்ற கேள்வியும் வருகிறது.
குறித்த தீயணைப்பு வாகனத்தின் பெறுமதிக்கு 40 இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு நிதி தர முடியுமென காப்புறுதி நிறுவனம் தெரிவித்த நிலையில் எஞ்சிய நிதியை ஏன்? மாநகர சபை பொறுப்பேற்க முடியாது என்ற கேள்வியும் எழுகிறது.
குறித்த விபத்து இடம்பெற்று இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் கோப்பாய் போலீசார் பலமுறை குறித்த வழக்கை நிறைவு செய்வதற்காக இழப்பீட்டை எவ்வாறு பெறப் போகிறீர்கள் என கடிதம் மேல் கடிதம் அனுப்பியும் இதுவரையும் பொறுப்பற்ற விதத்தில் மாநகர நிர்வாகம் செயற்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தற்போது யாழ் மாநகர சபையின் மூன்று வாகனங்களும் செயல் இழந்த நிலையில் உள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் திடீரென தீ அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே பல வழிகளிலும் மக்கள் வரிப்பணத்தை பெற்று அதிக வருமானத்தை ஈட்டும் சபையாக யாழ் மாநகர சபை காணப்படும் நிலையில் தீயணைப்பு பிரிவை கூட திறம்பட செயற்படுத்த முடியாத ஆணையாளர் தலைமையிலான நிர்வாகம் அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் மக்களுக்கு பொறுப்பு கூறலிருந்து தப்ப முடியாது..