சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்ற விவாதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக எதிர்கட்சி இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர், லச்மன் கிரியெல்ல இதனை இன்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்டவர்கள் இன்று கோரிக்கை விடுத்த நிலையில், அரசாங்கம் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளாமையை அடுத்தே லச்மன் கிரியெல்ல, விவாதம் ஒன்றை கோரப்போவதாக தெரிவித்தார்.
முன்னதாக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை, பொதுஜன பெரமுன, தேர்தலின்போது, முன்வைத்த கொள்கைகளுடன் முரண்படுவதை அடுத்தே அதனை நாடாளுமன்ற முன்வைக்க அரசாங்கம் தயங்குகிறது அத்துடன் மறைக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் இவ்வாறான விடயங்களை மறைக்க முற்படும்போது எவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
கனவாக காட்டப்பட்ட விடயத்தை ஏற்றுக்கொள்ள இணைந்து செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்வியாளரான சுசில் பிரேமஜயந்த இந்த விடயத்தை வெளிப்படுத்தாமையானது, அவரின் தமது அறிவுக்கு செய்யும் தீங்காகும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படவில்லை என்றும் இணக்கமே ஏற்பட்டுள்ளதாக அமைச்சரும், சபை முதல்வருமான சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
எனவே சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உடன்படிக்கை எட்டப்பட்ட பின்னர், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி வீத அதிகரிப்புக்கும் சர்வதேச நாணய நிதிய இணக்கத்துக்கும் இடையில் தொடர்பு இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.