
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரச சேவைகளை இலகுபடுத்துவதற்காக பல்வேறு அரச நிறுவனங்களால் தற்போது 98 பொதுப் படிவங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், சில படிவங்கள் காலத்துக்கு பொருந்தாமல் இருப்பதனால் அவற்றை தற்போதைய தேவைக்கு ஏற்ப திருத்தம் செய்ய வேண்டியுள்ளது.
இதற்கமைய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிறுவன பணிப்பாளர் நாயகம் எச்.ஏ. சந்தன குமாரசிங்க (தலைவர்), நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் டி.எச்.எஸ். புல்லேபெரும (உறுப்பினர்), பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (அபிவிருத்தி) யு.ஐ.டபிள்யூ. செனவிரத்ன (உறுப்பினர்) ஆகியோர் அரசாங்க அச்சகத்தால் அண்மையில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து பொதுப் படிவங்களையும் மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினால், அரசாங்க அச்சகத்தால் அண்மையில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து பொதுப் படிவங்களையும் மீளாய்வு செய்தல்.
குறைந்தபட்ச பயன்பாடுடைய பொதுப் படிவங்கள் மற்றும் அவற்றிலுள்ள தேவையற்ற பகுதிகளை அடையாளம் காணுதல்.
A4 காகித அளவுகளில் அச்சிடக்கூடியதாக இருந்தும் அதனைவிட பெரியளவிலான காகிதங்களில் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை அடையாளம் காணுதல்.
அச்சிடத் தேவையில்லாத பொதுப் படிவங்களைக் கண்டறிந்து பரிந்துரைத்தல், அதற்கு பதிலாக இணையதளங்களில் பொதுப் படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கான அணுகு முறையை ஏற்படுத்துதல்.
வழக்கற்றுப்போன பொதுப் படிவங்களை கண்டறிதல், பரிந்துரைக்கப்பட்ட மாதிரியுடனான (உள்ளடக்கம் மற்றும் அளவு) திருத்தப்பட்ட பொதுப் படிவங்களை மீளாய்வு செய்தல் மற்றும் இணையதளங்களின் ஊடாக பொதுப் படிவங்களை பதிவிறக்கம் செய்வதற்கு வசதியளித்தல் போன்ற பணிகள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த பரிந்துரைகளை தன்னிடம் கையளிக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் இக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.