இலங்கை உட்பட சீனாவிடம் இருந்து கடன் பெற்ற கணிசமான நாடுகள் சீனாவிடம் கடன் நிவாரணம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் சீனா தனது கடன் மறுசீரமைப்பு கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உலகின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனாவிற்கு இது ஒரு புதிய சவாலை உருவாக்கியுள்ளது என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2000 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை உலகில் உள்ள 165 நாடுகளுக்கு சீனா வழங்கிய கடனின் மதிப்பு 843 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அதில் 5 சதவீதத்திற்கும் குறைவானவையே வட்டியில்லா கடன்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
17 ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கிய 23 வட்டியில்லா கடன்கள் இதுவரை குறைக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வழங்கிய கடன் தொடர்பில் சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.